நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சகதி, மண் மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து 5-வது நாளாக நடைபெற்ற நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் அவர்களின் நிலை குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
நேபாளம் மற்றும் திபெத் எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில் வெளிநாட்டினர் 320 பேர் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 275-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 128 இந்திய வம்சாவளியினரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 108 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 238 மாணவர்கள் மற்றும் 18 ஆசிரியர்களும் காணாமல் போயுள்ளதாக நேபாள கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தில் பள்ளியை நோக்கி பாய்ந்த வெள்ளம்! 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியரின் துணிச்சல்!
திபெத் பகுதியில் மட்டும் 546 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகளுக்கு இடையே போட்டே கோஷி ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்துள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய வெள்ள அபாயம் உருவாகியுள்ளது.
இதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரும் பொதுமக்களும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேபாள வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. நான்கு கட்டங்களாக மொத்தம் 68.5 டன் நிவாரணப் பொருட்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளன. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு தொழில்நுட்பக் குழுக்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் தேவையான உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகளை மீண்டும் இணைக்கும் முயற்சியாக, 230 அடி நீளமுள்ள ஒற்றை வழி மாடுலர் உருக்கு பாலத்துக்கான உபகரணங்களை ஏற்றிச் சென்ற 16 லாரிகள் நேபாளத்தை சென்றடைந்துள்ளன. மேலும் பல பெய்லி பாலங்களை அமைப்பதற்கான உபகரணங்களுடன் தொழில்நுட்பக் குழுக்களும் அனுப்பப்பட உள்ளன.
இதையும் படிங்க: 5 நாட்களாக தகவல் இல்லை! நேபாளத்தில் சிக்கிய 100 தமிழர்களை தேடும் தீவிர பணி! உறவினர்கள் தவிப்பு!