தமிழகத்தில் காலியாக உள்ள 11 அரசுப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுக்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும், அக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதி தேவையில்லை என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ள 11 பல்கலைக்கழகங்களுக்குப் புதிய துணைவேந்தர்களை முறைப்படி தேர்வு செய்வதற்காகத் தேடுதல் குழுக்கள் (Search Committees) விரைவில் அமைக்கப்பட உள்ளன. மாநிலப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி மற்றும் சட்ட விதிகளின்படி தேடுதல் குழுக்கள் செயல்படும் என்பதால், அக்குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: "காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் ஜெயிக்கவே முடியாது"..! அடித்து சொல்லும் அமைச்சர் விஸ்வநாதன்..!
அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான பதவி உயர்வு (Promotion) மற்றும் பணி மூப்பு (Seniority) சார்ந்த நடைமுறைகள் அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், அதற்கான உத்தரவுகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2,700 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், சுமார் 27,000 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனத் தெரிவித்த அவர், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தகுதி நிலைகளின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிகளுக்கு முகவரியாக தவெக மாறிவிட்டது! எடப்பாடி பழனிசாமி கடுமையான தாக்குதல்!