பேராசிரியர் கலையரசனை அதிகாலையில் அழைத்துச் சென்று அச்சுறுத்தும் நடவடிக்கை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியரும் பொருளாதார ஆய்வாளருமான கலையரசனை, போலி இன்ஸ்டாகிராம் பதிவைக் காரணம் காட்டி அதிகாலையில் வீட்டிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக அவர் அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என சீமான் தெரிவித்தார்.
எல்லா நிலையிலும் மத்திய பாஜக அரசைப் பின்பற்றும் தவெக அரசின் ஆணவப் போக்கை தான் கண்டிப்பதாகவும், புகாரின் அடிப்படையைக்கூட விளக்காமல், தனது தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பளிக்காமல் அவரை குற்றவாளிபோல் நடத்திய காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார். கலையரசன் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், அக்டோபர் 28 அதிகாலை ஐந்து மணியளவில் சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள், தனது கைப்பேசியைப் பறித்துக்கொண்டு, புகார் நகலையோ முதல் தகவல் அறிக்கையையோ காட்டாமல் வாடகைக் காரில் அழைத்துச் சென்றதாகவும், குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கக்கூட உடனடியாக வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பேராசிரியரை இவ்வாறு பயங்கரவாதி போல நடத்த வேண்டிய அவசரமும் அவசியமும் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பினார்.பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் குறித்த இழிவான பதிவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும் கலையரசன் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது புகைப்படத்தைப் பயன்படுத்திய வேறொரு பெயரிலான கணக்கின் பதிவுக்காக அவரையே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவரின் அண்மை நேர்காணலுக்காகப் போடப்பட்டதுதான் இந்தப் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பது உறுதியாகிறது என சீமான் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: கலையரசன் கைது..! தவெகவின் பாசிச செயல்.! திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசம்.!!
அவரின் உலக பொருளாதார அறிவும், இந்திய பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதலும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வு தொடர்பான அவரது தர்க்கரீதியான கருத்தை சகித்துக்கொள்ளாமல், அவரை காவல்துறை கொண்டு முடக்க நினைப்பது பச்சை அயோக்கியத்தனம் என்று அவர் விமர்சித்தார். இதையேதான் மத்திய பாஜக அரசும், அண்மையில் ஜன்தர்மந்தர் போராட்டத்தில் அறிவுசார் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் மிரட்டி ஒடுக்க பொய்வழக்குகளைப் புனைந்து ஒடுக்குமுறையை ஏவியது என ஒப்பிட்டுப் பேசினார். காவல்துறை மக்களுக்கானதா அல்லது ஆளுங்கட்சிகானதா என சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு அவலத்தை மறைக்கவே கைது நாடகம்: அன்பில் மகேஷ் கைது குறித்து ஸ்டாலின் ஆவேசம்!