தமிழகத்தில் வெங்காய விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டசபையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு வழங்கப்படும். முதற்கட்டமாக 8,000 ரேஷன் கடைகள் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ வீதம் விற்பனை செய்யப்படும். இதற்காக தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையம் (நாபெட்) மூலம் 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது திறந்த சந்தையில் வெங்காயம் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிலும் விலை உயர்ந்துள்ளதால் சமையல் செலவு அதிகரித்து குடும்பங்கள் சிரமப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 37,328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் முழுநேர மற்றும் பகுதிநேரக் கடைகள் அடங்கும்.
இதையும் படிங்க: டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

இந்தக் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டையின் வகைக்கேற்ப வழங்கப்படுகின்றன. ரேஷன் அட்டைகள் ஐந்து வகைகளாக உள்ளன. PHH அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெறலாம். PHH-AAY அட்டை மிகவும் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி வழங்குகிறது. NPHH அட்டை அனைத்துப் பொருட்களுக்கும் தகுதியளிக்கிறது. NPHH-S அரிசி தவிர சர்க்கரை மற்றும் பிற பொருட்களைப் பெற உதவும்.
NPHH-NC அட்டை முகவரிச் சான்றாக மட்டும் பயன்படும்; பொருட்கள் வழங்கப்படாது.TNPDS செயலி அல்லது tnpds.gov.in இணையதளம் மூலம் ஸ்மார்ட் கார்டு விவரங்களைச் சரிபார்க்கலாம். முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்ப்பு அல்லது நீக்கம் போன்றவற்றை ஆன்லைனில் செய்ய முடியும். ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் தமிழக ஸ்மார்ட் கார்டுதாரர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உள்ள நியாயவிலைக் கடையில் கைரேகை மூலம் பொருட்களைப் பெறலாம்.
முன்னதாக தேங்காய் எண்ணெய், கேழ்வரகு மற்றும் சிறுதானியங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது வெங்காயமும் சேர்வதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!