தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள், மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு (ஐ.ஓ.சி.) எதிராக தீவிர போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.
தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் (South Zone LPG Gas Tanker Lorry Owners Association) நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கீழ் சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் ஐ.ஓ.சி., பாரத் பெட்ரோலியம் (பி.பி.சி.) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்.பி.சி.) ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் எரிவாயுவை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதில் சுமார் 1,000 லாரிகள் ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஐ.ஓ.சி. நிறுவனம் இந்த லாரி உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய வாடகைத் தொகையை திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த நிலுவைத் தொகை சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் சங்க நிர்வாகிகள் பலமுறை ஐ.ஓ.சி. உயர் அதிகாரிகளை சந்தித்து, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..! முன்கூட்டியே அறிவிப்பு..!!
இந்நிலையில், தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஐ.ஓ.சி. நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு இ-மெயில் மூலம் அதிரடி எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “நிலுவையில் உள்ள வாடகைப் பாக்கியை உடனடியாக வழங்காவிட்டால், கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் வரும் 16-ம் தேதி (வியாழக்கிழமை) நாமக்கல்லுக்கு அருகிலுள்ள பொம்மைகுட்டை மேட்டில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கான தேதியை இறுதி செய்து அறிவிக்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் சமையல் எரிவாயு விலை உயர்வும், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ள நிலையில், தென் மாநிலங்களில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் முழுவதும் கடுமையான எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.இந்தப் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டுமென்றால், ஐ.ஓ.சி. நிறுவனம் உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கி, லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தொழில் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு எதிராக திரளும் 'இந்தியா' கூட்டணி! டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவசர ஆலோசனை!