புதுச்சேரியில் போலி மருந்துத் தயாரிப்பு ஆலை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள 34 வகையான போலி மருந்துகளை ஆய்வு செய்து பறிமுதல் செய்யுமாறு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்தப் போலி மருந்து தயாரிப்பு ஆலை குறித்த உண்மைகளைக் கண்டறிந்தனர். மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் தங்கியிருந்து, காரைக்குடியைச் சேர்ந்த ஏ.கே. ராணா மற்றும் மெய்யப்பன் ஆகியோரின் பெயரில் போலியான தொழிற்சாலை உரிமத்தைப் பெற்றுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாகப் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலி மருந்து மற்றும் மாத்திரைகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலியாக உரிமம் தயாரித்துக் கொடுத்த ராணா மற்றும் மெய்யப்பன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்: "ஒரு பாசுக்கு ஒருவர் மட்டுமே!" – காவல்துறை எச்சரிக்கை
போலி மருந்து தயாரிப்பு குறித்துத் தகவல் கிடைத்தவுடன், புதுச்சேரி சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத் துறைகளுக்கும் கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில், குறிப்பிட்ட பேட்ச் வகையில் இருக்கக் கூடிய மருந்து, மாத்திரைகளை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
போலியான 34 வகையான மருந்து மாத்திரைகள் எந்தெந்த மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்தப் போலியான தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட வேறு ஏதேனும் மருந்துகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 34 போலி மருந்துகளின் பட்டியலில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான மருந்துகள் இடம்பெற்றுள்ளதுதான் அதிர்ச்சிக்குக் காரணமாகும்.
முக்கிய மருந்துகள்: குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மெட்பார்மின் மாத்திரைகள், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக்குப் பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள், இரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய மாத்திரைகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திடீர் உத்தரவு, சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் போலி மருந்துகளின் ஆபத்து குறித்து அச்சத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நிபந்தனைகளுடன் அனுமதி: விஜய் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி - தமிழ்நாட்டினருக்குத் தடை!