தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நீண்டகாலமாக பணி நிரந்தரம், சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இந்த போராட்டம் தீவிரமடைந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து நடத்தப்பட்டது. ஆறாவது நாளான ஜனவரி 13 அன்று நிலைமை மிகவும் மோசமானது.
போலீசார் அவசரமாகத் தலையிட்டு, 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கைது செய்து, சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி பகுதிநேர ஆசிரியரான கண்ணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

பல ஆண்டுகளாக தற்காலிகமாகப் பணியாற்றி வரும் நிலையில், அரசு தரப்பில் எந்த உறுதியான நடவடிக்கையும் இல்லாதது, போராட்டத்தின் நீண்டகால போக்கு, கைது செய்யப்பட்டு சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலை ஆகியவை அவரை மிகவும் உடைத்துவிட்டன. திடீரென, மண்டபத்தில் இருந்தபோது, கிடைத்த வார்னிஷ் ஒன்றை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.சக ஆசிரியர்கள் உடனடியாக உணர்ந்து, அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: நிலைமை சரியில்ல...! ஈரானிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு...!
போலீசாரும் உடனடியாக செயல்பட்டு, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் மண்டபத்தில் இருந்த அனைத்து ஆசிரியர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஏற்கனவே மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது போன்ற ஒரு துயர சம்பவம் நடந்தது அவர்களின் வேதனையை இன்னும் ஆழப்படுத்தியது. பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆசிரியர்களில் ஒருவரான கண்ணன் உயிரிழந்ததை அறிந்ததும் சக ஆசிரியர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் விற்கப்பட்ட துப்பாக்கி!! திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! நெல்லையில் பரபரப்பு!