தேசியக் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரரும் புரட்சிக் கவிஞருமான மகாகவி சுப்ரமணிய பாரதியின் 143வது பிறந்தநாள் இன்று உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாடு முழுவதும் இருந்து பாரதியாருக்கு மரியாதை செலுத்தும் பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் மிகவும் கவனம் பெற்றிருப்பது ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாணின் வேண்டுகோள்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பவன் கல்யாண் எழுதியுள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “சென்னையில் வளர்ந்த ஒருவனாக, பாரதியாரின் வாழ்க்கையிலிருந்து நான் மூன்று பெரிய பாடங்களைக் கற்றேன்: ஒன்று, தாய்நாட்டின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் அச்சமின்மையும்; இரண்டு, தாய்மொழியின் மீதான ஆழமான அன்பு; மூன்று, பல மொழிகளைக் கற்று அவற்றின் மீது மரியாதை செலுத்தும் பண்பு. இந்த மூன்று குணங்களும் ஒருவரிடம் இருந்தால் போதும், அவர் உண்மையிலேயே பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அனைத்துக் கட்சித் தலைவர்களும், இலக்கிய அமைப்புகளும், பொதுமக்களும் பாரதியாருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது ஆந்திர துணை முதல்வரின் இந்தப் பதிவு அந்தக் கோரிக்கைக்கு புதிய வலுவையும் பரவலான ஆதரவையும் தந்துள்ளது.
இதையும் படிங்க: யாரும் நம்மை தாக்க துணியக்கூடாது!! தமிழகத்தை சுட்டிக்காட்டி பவன் கல்யாண் பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் இன்று பாரதியாருக்கு தங்கள் மரியாதையை செலுத்தியுள்ளனர். ஆனால், பவன் கல்யாணின் பதிவு தனித்து நின்று பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
“எட்டயபுரம் பிறந்து எட்டாத உயரம் தொட்டவர்” என்று தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் பாரதியார், சுதந்திரப் போராட்டத்தில் தீப்பொறியாகச் செயல்பட்டவர்; பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, மொழி உரிமை, தேசபக்தி என அனைத்திலும் தன் கவிதைகளால் புரட்சி செய்தவர். அவருக்கு இதுவரை பாரத ரத்னா வழங்கப்படாதது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.
ஆந்திர துணை முதல்வரின் இந்த வேண்டுகோள் மத்திய அரசு கவனத்துக்கு செல்லுமா? பாரதியாரின் கனவு நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க: புரட்சியின் சுடரை ஏந்தி!! துணிவை தூண்டும் பாரதியார் கவிதைகள்! பிரதமர் மோடி, அமித் ஷா புகழாரம்!