போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறும் களங்களில் செய்திகளைச் சேகரிக்கும் போது, காவல்துறையினரின் முறையான உத்தரவுகளைப் பத்திரிகையாளர்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் போலீசாருடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியப் பத்திரிகையாளர் கவுன்சில் (Press Council of India - PCI) விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக நடைபெறும் போராட்டங்களின் போது செய்தியாளர்கள் தாக்கப்படுவதும், தடுத்து நிறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் போன்ற அசம்பாவிதச் சம்பவங்கள் தொடர்ந்து வந்தன.
களத்தில் செய்தியாளர்களின் பாதுகாப்பு, தொழில்முறை கண்ணியம் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுடனான சுமூக ஒத்துழைப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு! 4 கடற்கரைகளில் 18,500 போலீசார் குவிப்பு... டிரோன் கண்காணிப்பு தீவிரம்!
இந்தியப் பத்திரிகையாளர் கவுன்சில் வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டு நெறிமுறையில் கூறியுள்ளதாவது,
போராட்டக்களங்களில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் முறையான சட்டப்பூர்வ உத்தரவுகளுக்குச் செய்தியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; களத்தில் எந்தவொரு சூழ்நிலையிலும் காவல்துறையினருடன் வீண் வாக்குவாதங்களிலோ, மோதல்களிலோ ஈடுபடக் கூடாது.
பாதுகாப்புப் படையினரோ அல்லது போலீசாரோ அணுகும்போது, பதற்றமடையாமல் தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் என்பதைத் தெளிவாகவும் அமைதியாகவும் தெரியப்படுத்த வேண்டும்; புகைப்படத்துடன் கூடிய முறையான செய்தியாளர் அடையாள அட்டையை எப்போதும் வெளிப்படையாகத் தெரியும் வகையில் வைத்திருக்க வேண்டும்.

செய்தி சேகரிப்பாளர்கள் எப்போதும் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்; ஆர்ப்பாட்டங்களில் ஒருவராகப் பங்கேற்பது, ஏதேனும் ஒரு தரப்பிற்கு ஆதரவாக முழக்கமிடுவது அல்லது மோதல்களைத் தூண்டும் விதமாகச் செயல்படுவது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மோதல்கள் மற்றும் தடியடி ஏற்படும் தீவிரப் பகுதிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இடைவெளியில் நிற்க வேண்டும்; காவல்துறையின் தடுப்புகள், வாகனங்கள் அல்லது பொதுச் சொத்துகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கேமரா உபகரணங்களைப் பொருத்தக் கூடாது. கண்ணீர்ப்புகைக் குண்டுகள், பாதுகாப்பு சாதனங்களைத் தொடவோ அல்லது நகர்த்தவோ கூடாது.
பதற்றமான போராட்டக் களங்களுக்குச் செல்லும் முன், அவசர காலத்தில் வெளியேறும் பாதைகள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்; முதலுதவி மருந்துகள், குடிநீர், டார்ச்லைட், பாதுகாப்பு கண்ணாடிகள், ஹெல்மெட் உள்ளிட்ட தற்காப்புப் பொருட்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்: களத்தில் உள்ள நிருபர்களின் உயிர்ப் பாதுகாப்பைப் பணயம் வைத்து, எக்ஸ்க்ளூசிவ் காட்சிகள் மற்றும் உடனடி நேரலை ஒளிபரப்பு செய்யுமாறு ஊடக நிறுவனங்கள் அவசர அழுத்தங்களைத் தரக்கூடாது.
ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரத்தையும், உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகப் பணியையும் பாதுகாக்கும் அதே வேளையில், நிருபர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் களப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நெறிமுறைகள் காலத்தின் கட்டாயம் எனப் பத்திரிகையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: அரசியல் சமூக மாற்றத்திற்கான கருவி: 21 லட்சம் தலைவர்கள் இணைந்ததாக அண்ணாமலை பெருமிதம்!