இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கிராமப்புற மக்களின் வாழ்வியலை அவரைப் போல் எடுத்துக்காட்டியவர் வேறு யாருமில்லை என்றும் புகழ்ந்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு மிகப்பெரிய பேரிழப்பாக இருக்கிறது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
அதன் பிறகு 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார். அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர்.

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து வந்தவர், தனது மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கிப் போனார். கடந்த ஒரு சில மாதங்களாக பாரதிராஜா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இதையும் படிங்க: "இத்தனை நாட்கள் மக்களின் நம்பிக்கையோடு"..! நேருவின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!
பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். பாரதிராஜா மறைவு மிகுந்த துயரத்தை அழிக்கிறது என்று தெரிவித்துள்ளார். கிராமப்புற மக்களின் வாழ்வியலை அவரை போல் எடுத்துச் செல்ல எவரும் இல்லை என்று கூறினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும், தமிழ் சினிமாவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றவர் பாரதிராஜா என்று புகழாரம் சூட்டி உள்ளார்.
இதையும் படிங்க: தேசத்தின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கியவர் பிரதமர் மோடி..!! புகழ்ந்து தள்ளிய அமித்ஷா..!!