இரும்பு பெண்மணி என புகழப்பட்ட முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் விழா கோலம் பூண்டுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை யில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்குகிறார்.
இதனையடுத்து மாவட்டங்கள் தோறும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கட்சி கொடியேற்றி, ஜெயலலிதாவின் உருவ சிலை மற்றும் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளனர்.
இதையும் படிங்க: கடன் தான் நாட்டின் வளர்ச்சியா? வாக்களித்த மக்களுக்கு துரோகம்... சீமான் தாக்கு..!
இதனிடையே ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன். அவரைப் பற்றி இந்த மாத #MannKiBaat நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது இங்கு இடம் பெற்றுள்ளது” என பதிவிட்டு அதுதொடர்பான வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதிவில், “முன்னாள் தமிழக முதல்வரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள். ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார். பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊழலில் மூழ்கிய தமிழகம்..! அடுக்கு மொழி முதல்வர்..! பிரச்சனைகளை லிஸ்ட் போட்ட TTV..!