பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி கொடுத்தார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக மத்தியத் தலைவர்கள் வருகை தருவது குறித்து நயினார் நாகேந்திரன் விபரங்களை வெளியிட்டார். பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 18) கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். அமித்ஷா வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி, ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரம்மாண்ட 'ரோடு ஷோ' நடத்துகிறார்.

முதலமைச்சரின் தொடர் எதிர்ப்புகள் குறித்துப் பேசிய அவர் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம் முதலமைச்சருக்கு வந்துவிட்டது. அதனால்தான் எதற்கெடுத்தாலும் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் போட்டி எனக்கூறி எதிர்ப்புத் தெரிவிக்கிறார். எமர்ஜென்சி காலத்தில் திமுக-வினரைச் சிறையில் அடைத்தது போன்ற நிலை மீண்டும் வந்துவிடுமோ என அவர் அச்சப்படுகிறார் என்று நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ! நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் வாக்கு சேகரிப்பு!
தொகுதி மறுவரையறை என்பது அனைத்து மாநிலங்களிலும் சீராகவே உயர்த்தப்படும். வளரும் மாநிலங்களுக்கும், பெண்களுக்கும் உரிய இடங்களைத் தருவது காலத்தின் கட்டாயம். கடந்த 15 ஆண்டுகளாகப் பெண்களுக்கு இடஒதுக்கீடு தேவை எனப் பேசி வருகிறோம். அதனைச் செயல்படுத்தவே ஒன்றிய அரசு தற்போது முயற்சிக்கிறது என மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்
திமுக-வினர் தேர்தல் களத்தில் ரவுடிசம் காட்ட முயற்சிப்பதாகவும், மக்களுக்கான கடமையில் இருந்து முதலமைச்சர் தவறிவிட்டார் என்றும் நயினார் நாகேந்திரன் சாடினார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடாமல், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவரின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: எல்லாரும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிவிட முடியாது! நடிகர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் விளாசல்!