தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் விருப்பமும், தீர்ப்பும் தாம் எதிர்பார்த்ததை விட வேறாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் இந்தத் தீர்ப்பைப் பாமக மனமுவந்து ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக-விற்கு எதிராக மக்கள் மத்தியில் நிலவிய எதிர்ப்பலையைக் கூட்டணி அறுவடை செய்யும் என்று நம்பியதாகவும், ஆனால் மக்களின் முடிவு வேறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாமக தொடங்கப்பட்ட நாள் முதல் சமூகநீதி, உழவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மக்களின் நலன்களுக்காகப் போராடி வருவதாகவும், இனி வரும் காலங்களிலும் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து உழைப்போம் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தில் மூவர் வெற்றி! தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலில் மார்ட்டின் குடும்பத்தினர் சாதனை!

பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், உழைத்த நிர்வாகிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், பாமக-வின் இந்த 4 தொகுதிகள் ஆட்சி அமைப்பதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன. முன்னதாக, சௌமியா அன்புமணியைத் துணை முதல்வராக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாமக தவெக-விற்கு ஆதரவளிக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல்கள் கசிந்தன. இருப்பினும், இன்றைய அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் "மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளதால், அவர் அடுத்தகட்டமாக எந்த மாதிரியான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
108 தொகுதிகளில் வெற்றி பெற்று 34.92% வாக்கு விழுக்காட்டுடன் சாதனை படைத்துள்ள விஜய், இன்று தனது எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகப் பொறுப்பு கவர்னர் சென்னை வரவுள்ள நிலையில், பாமக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமையுமா அல்லது தமிழகத்தில் வேறு ஏதேனும் அரசியல் திருப்பங்கள் நிகழுமா என்பது விரைவில் தெரியவரும்.
இதையும் படிங்க: மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!