தமிழகத்தில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சினை அரசியல் தலைவர்களின் நிகழ்ச்சிகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் வருவாய்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இருட்டில் சிக்கிய நிலையில் தவெக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் அமைச்சர் தனது செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பேட்டியைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்ததும் அங்கிருந்தோர் நிம்மதி அடைந்தனர். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் திடீர் மின் தடைகள் அதிகரித்துள்ளன. இரவு நேரங்களில் ஏற்படும் வெட்டுக்கள் மக்களின் தூக்கத்தையும் அன்றாட வாழ்க்கையையும் பாதித்துள்ளன. சென்னை அமைந்தகரையில் நேற்று சுமார் எட்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மின்வாரியம் இதற்கு மின் அழுத்தக் கம்பி எரிந்ததே காரணம் என விளக்கியது.
இதையும் படிங்க: முதல்வர் எல்லோரையும் உற்சாகப்படுத்தவே விரும்புகிறார்.. அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்!
மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், தென் மாநிலங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நிலைமையைச் சமாளிக்க கூடுதலாக இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து புகார்கள் வருவதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் செங்கோட்டையன் முன்னதாக தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட மின் பற்றாக்குறை குறைவாகவே உள்ளது எனவும், முதலமைச்சர் விஜய் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். இதேபோல் திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அம்பேத்கர் பயிலரங்கத் திறப்பு விழாவில் பங்கேற்றபோதும் மின்வெட்டு ஏற்பட்டது. அவர் மேடை ஏறிய உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
டார்ச் வெளிச்சத்தில் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கட்சியினர் அப்செட் ஆனனர். திருமாவளவன் விரைவில் அங்கிருந்து புறப்பட்டார். தவெக ஆட்சிக்கு வந்தபின் தொடரும் இந்த மின் பிரச்சினை அரசியல் கூட்டணிக் கட்சிகளின் நிகழ்ச்சிகளையும் பாதிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. மக்கள் நிவாரணம் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், வைரல் காட்சிகள் அரசின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் விவகாரத்தால் அனல் பறந்த சட்டமன்றம்.. செங்கோட்டையன் vs இபிஎஸ்.. நடந்தது என்ன?