குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வர உள்ளார். இதற்காக சென்னை, திருச்சி, திருவாரூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திரெளபதி முர்மு தமிழகம் வருகை:
இந்திய குடியரசுத் தலைவர் ஆன திரௌபதி முர்மு இன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார். சென்னை, திருச்சி, திருவாரூர், ஸ்ரீரங்கம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையும் படிங்க: #BREAKING: அதிமுகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்? பகீர் கிளப்பும் திடீர் முடிவு!
இதற்காக கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் புறப்படும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று காலை 11.40 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர், மதியம் 12.10 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு சென்று, சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மாலை 1.35 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். அங்கு ஆளுநர் ஆர்.என். ரவி அவரை உபசரிக்க இருக்கிறார்.
திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்:
நாளை (செப்.3) காலை 9.20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர், பழைய விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் 10.30 மணிக்கு திருச்சி சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் செல்கிறார்.
திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய மத்திய பல்கலைக்கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா வருகின்ற நாளை 3-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதில் இந்திய குடியரசு தலைவர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் மேன்மையர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெறும் மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்குவார்.
இந்த ஆண்டு மொத்தம் 1,010 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இதில் 568 பெண்கள், 442 ஆண்கள் ஆவர். இதில் 34 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் உள்ளிட்ட 45 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற உள்ளனர்.. மேலும்..இந்த ஆண்டு 27 பெண்கள் மற்றும் 17 ஆண்கள் ஆக 44 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர்.
இதில் 454 பெண்கள் மற்றும் 317 ஆண்கள் உள்பட 771 மாணவ மாணவியர்கள் நேரிடையாக பட்டம் பெற உள்ளனர். இந்த பட்டமளிப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகையையொட்டி மத்திய பல்கலைக்கழகத்தில் முன்னேற்பாடு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
மேலும் பாதுகாப்பு பணிக்காக திருச்சி மத்திய மண்டல ஐஜி தலைமையில் 5 எஸ் பி மற்றும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் ட்ரோன் பறக்கவும் மாவட்ட காவல்துறையால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
குறிப்பு கடந்தாண்டு மத்திய பல்கலைக்கழகத்தில் குடியரசு தலைவர் பட்டமளிப்புவிழாவில் பங்கேற்க இருந்த நிலையில் கனமழை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்:
பட்டமளிப்பு விழாவை முடித்த கையோடு, திருவாரூரில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர், ஸ்ரீரங்கம் சென்று புகழ்பெற்ற ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானப்படை தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்கள், ஆளுநர் மாளிகை, நந்தம்பாக்கம் வர்த்தக மையம், திருவாரூர் பல்கலைக்கழகம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: உலக அளவில் மாஸ் காட்டிய பிரதமர்!! சீனா மீட்டிங்கில் மோடி தான் ஹைலைட்!!