ராமதாஸின் பேரன் முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் இருந்து அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது. இன்று வரை பிரச்சனை ஓயாத நிலையில் கட்சியை இருவரும் இரு பிரிவுகளாக பிரித்துக் கொண்டுள்ளனர். ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என்று பிரிந்து தனித்தனியாக செயற்குழு கூட்டங்கள், பொதுக்குழு கூட்டங்கள், நடைபயணம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான் என்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கட்சியின் தலைவர் யார் என்பதிலும் போட்டி நிலவி வருகிறது. யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளனர். முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் பிரச்சனை தொடங்கிய நிலையில், ராமதாசின் மகளும், முகுந்தனின் தாயாருமான ஸ்ரீகாந்தி செயற்குழுவில் இடம் பெற்று இருப்பது மேலும் இந்த விவகாரத்தை தூண்டி உள்ளது.

அன்புமணி மீது பதினாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அன்புமணி தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கப்படாத நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த பிரச்சனை நீண்டு கொண்டிருக்கும் சமயத்தில் பாமகவின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் அச்சிடப்பட்டு உள்ளது. அதில் அன்புமணியின் புகைப்படம் இடம்பெறவில்லை. மாறாக அவரது பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அதிருப்தியில் ராமதாஸ்… அலட்டிக்காத அன்புமணி! ஒழுங்கு நடவடிக்கை அறிக்கை சமர்ப்பிப்பு
இந்த சம்பவம் மேலும் பிரச்சனையை பூதாகரமாக்கி உள்ளது. ஏற்கனவே அன்புமணி தனது தரப்பு ஆதரவாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய நிலையில் தற்போது ராமதாஸ் தரப்பு தயாரித்த உறுப்பினர் அட்டையில் அன்புமணியின் புகைப்படம் இடம்பெறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நோட்டீஸ் கொடுத்தும் கண்டுக்கல! அடுத்த கட்ட நடவடிக்கை? பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் காரசார விவாதம்..!