அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பிரச்சனை நீண்டு வருகிறது. தந்தை - மகன் பிரச்சனையானது கட்சியில் எதிரொளித்து பாமகவை துண்டாடிவிட்டது என்றே சொல்லலாம். தனது சொந்த அக்காவின் மகனான முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் ஆரம்பித்தது பிரச்சனை. அதன் பிறகு பிரச்சனை படிப்படியாக வளர்ந்து அன்புமணி தரப்பு, ராமதாஸ் தரப்பு என பிரியும் அளவிற்கு ஏற்பட்டுவிட்டது. பிரச்சனை இன்று ஓயும், நாளை ஓயும் என எதிர்பார்த்து காத்திருந்த பாமக தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் என நிகழ்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாது பாமகவின் தலைவர் யார் என்பதில் போட்டியும் குழப்பமும் நடித்து வருகிறது. நீதிமன்றம் வரை சென்று விட்டது பாமகவின் பிரச்சனை. இப்படி இருக்க தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் என அன்புமணி அறிவித்தார். இந்த பிரச்சனை இன்னும் பூதாகரமாக வெடித்தது. அதற்குள்ளேயே அரசியலில் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது. அதிமுகவுடன் அன்புமணி தரப்பு பாமக கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அன்புமணியும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி முடிவான நிலையில் டெல்லி சென்று எடப்பாடி பழனிச்சாமி ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அன்புமணியிடம் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு...! ராமதாசை சந்திக்கும் சி.வி சண்முகம்..!
தேர்தல் ஆணையத்தை சுட்டிக்காட்டி அடிப்படை உறுப்பினர் கூட இல்லாதவரை வைத்து எப்படி கூட்டணி பேச முடியும் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியதாக கூறப்பட்டுள்ளது. அன்புமணியை பாமக தலைவர் என்று குறிப்பிடுவது சட்டத்திற்கு எதிரானது என்று என்றும் தானே தலைவர் என்பதில் உறுதியோடு இருப்பதாக ராமதாஸ் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நாளை தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அதிமுக அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தவறு என்று திட்டவட்டமாக ராமதாஸ் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருமகளின் பதவி இனி மகளுக்கு!! ஆட்டத்தை ஆரம்பித்தார் ராமதாஸ்! சவுமியா அன்புமணியின் தலைவர் பதவி காலி!