ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான ஆன்மிக மற்றும் சுற்றுலா மையமாக விளங்குகிறது. இங்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, தேவிப்பட்டினம் நவபாஷாண கோவில், உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடம் போன்ற பல புனித தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியை வந்தடைகின்றனர்.
ஆனால், இவர்கள் பெரும்பாலும் மதுரை, திருச்சி அல்லது தூத்துக்குடி விமான நிலையங்கள் வழியாக வந்து, பின்னர் பேருந்து அல்லது ரயில் மூலம் நீண்ட நேரப் பயணத்திற்குப் பிறகே ராமேஸ்வரத்தை அடைகின்றனர். இதனால், ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக மக்களிடையே இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்ய உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின் இந்த முயற்சி, ராமநாதபுரம் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ (TIDCO) மூலம் இடம் தேடும் பணிகள் தொடங்கப்பட்டன.
இதையும் படிங்க: வேலைக்கு வரலனா வேறு ஆட்களை பணியமர்த்துவோம்... ஐகோர்ட்டில் தனியார் நிறுவனம் திட்டவட்டம்!
ராமநாதபுரத்தில் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், விமான நிலையம் அமைக்க கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் என டிட்கோ அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: STARTUP கம்பெனிகளுக்கு அடிச்சிது ஜாக்பாட்! புதிய திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!