தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் வெறுங்கால்களில் நடப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லெப்டோஸ்பைரோசிஸ், எலிகள் மற்றும் பிற விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவும் ஒரு பாக்டீரியா தொற்று நோயாகும். இது மழைக்காலங்களில், குறிப்பாக தேங்கிய மழைநீரில் மாசுபடுவதன் மூலம் மனிதர்களுக்கு எளிதில் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, தசை வலி, மஞ்சள் காமாலை மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இதையும் படிங்க: எலி காய்ச்சலால் தற்காலிகமாக மூடப்பட்ட கல்லூரி.. ஆனால் இதற்கு மட்டும் அனுமதி..!!
எலி காய்ச்சல் நோயை கண்டறிய, மத்திய அரசால் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உட்பட, 10 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு எலி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. எலி காய்ச்சல் பாதிப்பை உறுதிப்படுத்த, RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில், 2021ம் ஆண்டில் 1,046 பேருக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை, 2022ல், 2,612 ஆகவும், 2023ல் 3,002 ஆகவும் அதிகரித்தது. கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமானோருக்கு எலி காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை, 1,500க்கும் அதிகமானோருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், இந்த நோயின் பரவல் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் சாக்கடைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அதிக அபாயத்தில் உள்ளனர். இதனால், பொது சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தியுள்ளது. மேலும் பாதிப்பு உள்ள மாவட்டங்களில், மருத்துவ கண்காணிப்பு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
வெறுங்கால்களில் நடப்பதைத் தவிர்ப்பது, கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வது, குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பு உடைகள் அணிவது ஆகியவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாநில அரசு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், மழைநீர் தேங்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: கண்காணிப்பு வளையத்திற்குள் 100 மாணவர்கள்; தனியார் கல்லூரியை சுத்துப்போட்ட சுகாதாரத்துறை - நெல்லையில் பரபரப்பு...!