அழகென்ற சொல்லுக்கு முருகா... தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் இருக்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆகிவிடும். குறிப்பாக தைப்பூசம் பழனி மலை கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கார்த்திகை மார்கழி மாதங்களில் விரதம் இருக்கும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பர்.
இதையும் படிங்க: நான் தான் நகை போடுவேன்! அர்ச்சகர்களிடையே கடும் மோதல்! பல மணி நேரம் காத்திருந்த சண்முகர் சப்பரம்..!
இதேபோல பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, தை கிருத்திகை உள்ளிட்ட முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் பழனி மலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரளும். மேலும் வெள்ளி, செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பழனி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். பழனி கோயிலில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் உலக புகழ் பெற்ற பஞ்சாமிர்தம்.
பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் 690 படிகள் ஏறமுடியாத வயதானவர்கள், சிறுவர்கள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் 3 நிமிடத்தில் செல்வது மட்டுமல்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப் காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரோப் கார் சேவையில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜூலை 15ம் தேதி முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 20ம் தேதியான இன்று முதல் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இச்சேவை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும், மதியம் 1:30 முதல் 2:30 மணி வரை பராமரிப்பு இடைவேளை உட்பட. பராமரிப்பு பணிகளின்போது, பெட்டிகள், கம்பி வடங்கள் மற்றும் உருளைகள் புதுப்பிக்கப்பட்டு, IIT வல்லுநர் குழுவால் சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மீண்டும் பாதுகாப்பாகவும், விரைவாகவும் மலைக்கோவிலுக்கு செல்ல முடியும். கோவில் நிர்வாகம், பக்தர்கள் இச்சேவையை பயன்படுத்தி முருகனை தரிசிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2 முறை CHANCE கொடுத்தும் ED கண்டுகல! ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி..!