தமிழ்நாடு மாநில மதுபானக் கழகமான டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியது. இந்த முறைகேடு, மதுபான கொள்முதல், பார் உரிமம் வழங்குதல், மற்றும் மதுபானங்களை கடைகளுக்கு விநியோகிக்க டெண்டர் வழங்கியதில் நடந்த மோசடிகளை உள்ளடக்கியதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின்போது, ஆவணங்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன, மேலும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து, ஆகாஷ் பாஸ்கரனும் விக்ரம் ரவீந்திரனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறையின் சோதனை மற்றும் ஆவணங்கள் கைப்பற்றல் ஆகியவை சட்டவிரோதமானவை எனவும், இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வைக்கப்பட்ட சீல்களை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: தேவநாதன் சொத்து விபரம் எங்கே? முழு தகவலை கொடுங்க.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு..!

அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் தொடர்பு இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் கருதியது. மேலும், அமலாக்கத்துறையின் சோதனை நடவடிக்கைகளுக்கு தடை விதித்ததுடன், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டது.
இருப்பினும், இந்த உத்தரவை மீறி, அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது. இது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவை மீறிய செயலாக கருதப்பட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யத் தவறியது. இதற்கு முன்பு இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது முறையாக பதில் மனு தாக்கல் செய்யப்படாதது குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், அமலாக்கத்துறைக்கு 30,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஸ் குமார் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 30,000 ரூபாய் அபராதத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விசாரணைக்கு வாங்க... ஜெகத்ரட்சகனுக்கு எதிரான ED நோட்டீஸுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!