ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நரேஷ் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கோபி என்பவர் தலைமையிலான ரவுடி கும்பலும், ஆனந்தராஜ் என்பவர் தலைமையிலான ரவுடி கும்பலும் செயல்பட்டு வந்துள்ளன. இவர்கள் இரு தரப்பினருக்கும் இடையே யார் பெரியவர் என்பது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில்தான், கடந்த 16ஆம் தேதி நெய்வேலியில் மது அருந்திக்கொண்டிருந்த ஆனந்தராஜ் கும்பலினரை திடீரென கோபி கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆனந்தராஜ் என்ற ரவுடி படுகாயமடைந்து, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையே கொதிக்க வைத்த என்கவுண்டர்..! பறிபோன தமிழர்கள் உயிர்..!! சிஐடிக்கு வழக்கு மாற்றம்..!!
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி கோபியை போலீசார் தேடி வந்தனர். இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவருடன் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்தனர்.
கோபியை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், நெய்வேலி அருகே உள்ள புலவன்குப்பம் பகுதியில் உள்ள முந்திரிக் காட்டில் அவர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலைத் தொடர்ந்து நெய்வேலி போலீசார் அவரைப் பிடிக்கச் சென்றபோது, திடீரென ரவுடி கோபி போலீசாரை அறிவாளால் தாக்கத் தொடங்கினார். இதில் நெய்வேலி காவல் நிலைய காவலர்கள் பாண்டியராஜன் மற்றும் விஜயல சோழன் ஆகிய இருவரும் வெட்டுக்காயம் அடைந்தனர்.
இதையடுத்து, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில் ரவுடி கோபியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது இடது காலில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில், கோபி கீழே விழுந்தார்.
காயமடைந்த கோபியை உடனடியாக போலீசார் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், காயமடைந்த காவலர்கள் இருவரும் என்எல்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
28 வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!