கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஏற்பட்ட தங்கத் திருட்டு சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு கோவில் சன்னிதானம் அருகிலுள்ள துவாரபாலகர் சிலையின் தங்கக் கவசம் பராமரிப்புப் பணிகளுக்காக அகற்றப்பட்டது. இதை திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டுக்கு ஒப்படைக்கும் போது, அதன் மொத்த எடை 42.8 கிலோகிராமாக இருந்தது.

சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தால் செப்பனிடப்பட்ட பின்னர் திருப்பி வழங்கப்பட்டபோது, எடை 38.26 கிலோகிராமாகக் குறைந்திருந்தது. இதன் மூலம், சுமார் 4.54 கிலோகிராம் தங்கம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி. மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இதையும் படிங்க: விண்ணை தொட்ட சரண கோஷம்! சுடர்விட்டு பிரகாசித்த மகரஜோதி; பரவசத்தில் அய்யப்ப பக்தர்கள்!
இக்குழு, தேவஸ்தான அதிகாரிகள், தொழில்முன்னோடிகள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், சபரிமலை கோவிலின் மூத்த தந்திரியான கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டார். தங்கக் கடத்தலுக்கு அவரும் உடந்தையாக இருந்தது வெளிப்பட்டது. தற்போது, இந்த தங்கத் திருட்டு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ஈடி) தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் அம்பத்தூர் பகுதியிலுள்ள நகைக்கடைகள், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இது தமிழ்நாட்டுடன் நின்றுவிடவில்லை; கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இச்சம்பவம் கோவில் நிர்வாகத்தில் உள்ள ஊழல் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. பக்தர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில், விசாரணை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத் திருட்டு போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை. அமலாக்கத்துறையின் சோதனைகள் மூலம் மேலும் தகவல்கள் வெளியாகலாம்.
இதையும் படிங்க: சபரிமலையில் பறந்த தவெக கொடி..!! உடனே கேட்ட குரல்..!! இருந்தாலும் இவங்க பண்ற அலப்பறைய தாங்க முடியல..!!