சேலம் மாவட்டத்தில் ஜூலை 15 அன்று நடந்த ஒரு கொடூரமான சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியது. தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடியான மதன்குமார் (எ) அப்பு, சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்தில் ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம், பகலில் காவல் நிலையத்துக்கு அருகே நடந்ததால், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் உருவாக்கியது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதன் குமார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள், குறிப்பாக 2019-இல் நடந்த ஒரு கொலை வழக்கு மற்றும் 2024 ஏப்ரலில் தூத்துக்குடியில் கப்பல் மாலுமி மாரடோனாவை ஆறு பேர் கொண்ட கும்பல் கொலை செய்த வழக்கு உள்ளிட்டவை நிலுவையில் இருந்தன.
இந்த வழக்குகளின் காரணமாக, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த மதன், நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஜூலை 15 அன்று, வழக்கம்போல காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, மதன் அருகிலுள்ள ஒரு அசைவ உணவகத்தில் உணவு உட்கொண்டு கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பல், உணவகத்துக்குள் நுழைந்து, மதனை கத்தி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் மதன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தாக்குதல் நடந்தவுடன், உணவகத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த அஸ்தம்பட்டி உதவி ஆணையர் அஸ்வினி மற்றும் காவல்துறையினர், மதனின் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை நடந்த இடத்தை காவல் துணை ஆணையர் கேழ்கர் சுப்ரமணிய பால்சந்திரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில், கொலையாளிகள் 6 பேரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்தும், தேடப்படும் கொலையாளிகள் தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!
இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன்... மரக்கட்டையால் தாக்கப்பட்ட கொடூரம்..!