தமிழக பாஜகவில் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமார், இன்று வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தனது அரசியல் எதிர்காலம், கட்சி மேலிடம் மீதான அதிருப்தி மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
தனது பேட்டியில் பாஜக தலைமை மீதுள்ள அதிருப்தியைச் சரத்குமார் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளார். ஒரு மாநிலத் தலைவராக இருந்த என்னை, பாஜகவில் இணைந்த பிறகு தேசியப் பொறுப்பு கொடுத்து அங்கீகரித்திருக்க வேண்டும். எனது இந்த ஆதங்கத்தை மேலிடம் புரிந்து கொள்ள வேண்டும். நான் அண்ணாமலை சொல்லிப் பாஜகவில் இணையவில்லை; பிரதமர் மோடி மீதுள்ள ஈர்ப்பினால் மட்டுமே இணைந்தேன், என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தானும், தனது மனைவி ராதிகா சரத்குமாரும் போட்டியிடப் போவதில்லை என அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேசமயம், தனது ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பப்பட்டால் அதைத் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி அரசியலில் குதித்துள்ள நடிகர் விஜய்யை சரத்குமார் கடுமையாகச் சாடியுள்ளார். விஜய் ஒரு தலைவனே கிடையாது என்று குறிப்பிட்ட அவர், 1996 தேர்தலில் திமுக - தமாகா கூட்டணிக்கு ஆதரவாகத் தான் எப்படித் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தேனோ, அதேபோல 2026 தேர்தலில் விஜய்யின் தவெக-விற்கு எதிராகத் தனது பிரச்சாரம் அமையும் என்று சவால் விடுத்துள்ளார்.

பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரைப் பிரதமர் மோடி குறிப்பிடாதது குறித்த கேள்விக்கு, "இதை அதிமுகவோ அல்லது இபிஎஸ்ஸோ பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை, என்று அவர் சுருக்கமாகப் பதிலளித்தார்.
சரத்குமாரின் இந்தத் திடீர் அதிருப்தி மற்றும் விஜய்க்கு எதிரான நிலைப்பாடு, பாஜக கூட்டணிக்குள் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தவெக-விற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன் என்ற அவரது அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!