தமிழகத்தில் மிகுந்த அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் லாக்அப் மரண வழக்கில், இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த கொடூர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த மொபைல் கடை வியாபாரிகளான தந்தை பி. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜெ. பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கடை நேரத்தை மீறி செயல்பட்டதாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் இருவரையும் அழைத்துச் சென்றனர்.
பிறகு மறுநாள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையான தாக்குதலால் படுகாயங்களுடன் இருந்ததாகவும், இரத்தக் காயங்கள், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் பதிவாகியது. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். உடற்கூறாய்வு அறிக்கையில், இருவரது உடல்களிலும் 70க்கும் மேற்பட்ட காயங்கள், உள் ரத்தக்கசிவு, எலும்பு முறிவுகள் போன்றவை இருந்ததாகத் தெரியவந்தது. இது தெளிவாக காவல் துறையினரின் கொடூர தாக்குதலால் ஏற்பட்ட மரணம் என்பதை உறுதிப்படுத்தியது.இச்சம்பவம் வெளியானதும் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. மதுரை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை எடுத்தது. உடற்கூறாய்வு வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டது.

முதலில் போலீஸ் விசாரணை நடத்தியபோதிலும், பெரும் அழுத்தத்தால் முதலமைச்சர் உத்தரவின்பேரில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை, சதி, ஆதார அழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நடுங்க வைத்த சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு வெளியானது.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய தந்தை - மகன் லாக்கப் டெத்... கொடூர காக்கிகளுக்கு இன்று தீர்ப்பு... சாத்தான்குளம் வழக்கு கடந்து வந்த பாதை இதோ...!!
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் தீர்ப்பை மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் வாசித்தார். தந்தைக்கு மகனுக்கும் காவலர்களால் தான் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகி இருப்பதாகவும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட போதே தந்தை மகன் இருவருக்கும் உடலில் காயங்கள் இருந்துள்ளது எனவும் தெரிவித்தார். இருவருக்கும் மரணங்களை விளைவிக்கக் கூடிய காயங்கள் இருந்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகையை நீதிபதி சுட்டி காட்டினார். அடித்து பழக அப்பா, மகன் கிடைத்திருப்பதாக காவலர்கள் பேசிக் கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார். கைகளை கயிற்றைக் கட்டி தொங்கவிட்டு இருப்பதாகவும், இயற்கைக்கு மாறான காயங்கள் இருந்ததாகவும் நீதிபதி தெரிவித்தார். கொலை என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். 200 முறைக்கு மேல் தாக்கியிருப்பதாக உறவினர்களிடம் பென்னிக்ஸ் கூறியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கஸ்டடி கொலை வழக்கில் ஒன்பது போலீசாரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விபரங்கள் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடுங்க வைத்த சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு... கண்ணீருடன் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு வருகை..!!