சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 87 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டடங்களை அடுத்த கட்டமாக இடிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நவம்பர் இருபத்து ஏழாம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் புலிகள் சரணாலயம் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் முக்கியமான பகுதியாகும். தேசிய வனவிலங்கு வாரியம் மற்றும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் பல ரிசார்ட்டுகள் இங்கு செயல்பட்டு வந்தன. குடியிருப்புப் பயன்பாட்டிற்காக அனுமதி பெற்ற இடங்களை வணிக நோக்கில் ரிசார்ட்டுகளாக மாற்றி நடத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்தை அணுகினர்.நீண்டகாலமாக இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. முன்னதாக சில ரிசார்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், மேலும் பல இடங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் தொடர்ந்து இயங்கி வந்தன. ஆய்வுகளின் போது மொத்தம் எண்பத்தி ஏழு ரிசார்ட்டுகள் உரிய அனுமதிகள் இல்லாமல் செயல்படுவது உறுதியானது. இதையடுத்து உயர்நீதிமன்றம் கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: தப்பியோடிய கைதிகள் சரணடைந்ததும் என்ன நடந்தது.? உடல் பரிசோதனை செய்யுங்க..! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.!
நீதிபதிகள், இந்த ரிசார்ட்டுகளை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகு கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெளிவாக உத்தரவிட்டுள்ளனர். இயற்கை பாதுகாப்பு சட்டங்களை மீறி இத்தகைய கட்டுமானங்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்பதே நீதிமன்றத்தின் அணுகுமுறையாக உள்ளது. புலிகள் சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் இயக்கம் மற்றும் சூழலியல் சமநிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!