கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அதிமுகவின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை செங்கோட்டையன் புறக்கணித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். இருப்பினும் சமீபத்தில் செங்கோட்டையன் கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். அதிமுக தலைமை மீது செங்கோட்டையன் அதீத அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் தான் மனம் திறந்து பேசுகிறேன் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் தான் மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்தார்.

தனது நிலைப்பாட்டை தெரிவிக்க போவதாக கூறிய செங்கோட்டையன் சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. அது மட்டுமல்லாது அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது. அதிமுக மீதான அதிருப்தியில் அவர் கட்சியில் இருந்து விலகப் போகிறாரா அல்லது அனைவரும் ஒன்றிணைைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளாரா என்ற பல கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார். வெளியே சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் வெற்றி என்ற இலக்கை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: சசிகலா உள்ளிட்டோரை அரவணையுங்கள்! பரபரக்கும் அரசியல் சூழலில் மனம் திறந்த செங்கோட்டையன்…
வெற்றி வாகை சூடுவதற்கு, நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். மனமகிழ்ச்சியோடு எதிர்காலத்தை நோக்கி மக்கள் நினைப்பதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார். விரைந்து அதனை செய்யுங்கள் என்றும் பத்து நாட்களுக்குள் இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். அப்படி செய்யவில்லை என்றால் யார் யாரெல்லாம் இந்த மனநிலையில் இருக்கிறார்களோ அவர்களை இணைத்து செயல்படுத்த முயற்சி எடுப்பேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: அவர் சொல்லட்டும்... நான் பேசுறேன்! செங்கோட்டையனின் அதிருப்தி குறித்து ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி