மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபெருமாள், அவரது மனைவி சிவகாமி அம்மாள், இவர்களது மகள் நிகிதா. இவர் கொடுத்த புகாரில் தான் சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி தமிழகத்தை உலுக்கி உள்ளது.
தற்போது நிகிதா ஏற்கனவே பலமுறை பண மோசடி புகாரில் சிக்கியவர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2011ல் திருமங்கலத்தை சேர்ந்த ராஜாங்கம் என்பவரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த வழக்கின் எப்ஐஆரில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அதுமட்டும் அல்லாமல், ஆலம்பட்டியை சேர்ந்த முத்துக்கொடி என்பவருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.5 லட்சம் மோசடி செய்ததாகவும், முருகேசன் என்பவரிடம் நூலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.5 லட்சம் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் திருமங்கலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆசிரியர் பணி வாங்கி தருவதாக 9லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும், செக்கானூரணி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.25 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திருப்புவனம் அஜித்குமார் மரணத்தில் ட்வீஸ்ட்.. புகாரளித்தவர் மீது குவியும் மோசடி வழக்கு.. யார் அந்த நிகிதா?
மொத்தமாக திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிகிதா மீது 8 பேர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகிதா டாக்டர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவம் படித்தவர் அல்ல. அவர் பி.எச்டி. முடித்தவர் என்கிறார்கள். அவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. திருமங்கலத்தில் அவரது வீடு தற்போது பூட்டிக்கிடக்கிறது.

நிகிதாவும், தாயாரும் எங்கு சென்றார்கள்? என்பது தங்களுக்கு தெரியாது என அக்கம்பக்கத்தினர் கூறினர். குற்ற பின்னணி கொண்டவர் சொன்னதை வைத்து ஒருவரை விசாரணை என்கிற பெயரில் போலீஸ் அடித்து கொன்ற சம்பவம் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இந்த நிலையில் திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணத்தில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்களுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணத்தினால் நேர்ந்த ரணம் ஆறும் முன்னே அவ்வழக்கில் தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. ஆகவே, சில நாட்கள் முன்பு நான் எழுப்பிய 9 கேள்விகளைத் தொடர்ந்து, மேலும் 3 கேள்விகளை தமிழக பா.ஜ., சார்பாக முன்வைக்கிறேன்.

1. அஜித் குமார் மீது புகாரளித்த நிகிதா மீது ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு அன்றையத் துணை முதல்வர் ஸ்டாலின் நேரடி உதவியாளர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கும் திமுக-வின் உயர் மட்டத் தலைமைக்கும் தொடர்புகள் இருந்ததால் தான் தனிப்படை அமைத்து அஜித் குமாரை அடித்தும், துன்புறுத்தியும் விசாரிக்க உடனடி ஆணை பிறப்பிக்கப்பட்டதா?
2. அஜித்குமாரை காவலர்கள் துன்புறுத்துவதை நேரில் கண்டு காணொளியாக படம்பிடித்த முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். யார் இவரை அச்சுறுத்துகிறார்கள்?

3. எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமலேயே தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்த அந்தத் தலைமைச் செயலக அதிகாரியைப் பற்றிய தகவல்கள் இன்னும் அரசு வெளியிடாதது ஏன்? அஜித்குமாரின் கொலையில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கையில், வெறும் ஆறுதல் வார்த்தைகள் பேசிவிட்டும் இழப்பீடு வழங்கிவிட்டும் அப்பாவி உயிரின் மரணத்திற்கான நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் பைப்ல அடிச்சுதான் இவ்ளோ காயமா? 2வது நாளாக நீடிக்கும் விசாரணை.. நீதிபதிகள் விளாசல்..!