தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜயின் இன்றைய கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை ஆபத்தானதாக இருப்பதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் பார்ப்போரைக் கலங்கடிக்கச் செய்திருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்.. கரூர் சம்பவம் குறித்து விஜய் இரங்கல்..!!
கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசி முடித்து வெளியேறிய பின்னர் கூட்டம் கலைவதற்கிடையே இந்தப் பேரழிவு வெளிப்பட்டது.
காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக தலைமை மீறியதே இதன் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி, போக்குவரத்து கட்டுப்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை புறக்கணிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. சம்பவ நேரத்தில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்ததால் நெரிசல் தீவிரமடைந்தது.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், துயரத்தில் பங்கேற்கும் விதமாக கரூரில் நாளை முழு கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா அறிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடத்த அறிவிக்கப்பட்டதோடு, மாநிலம் முழுவதும் குறைந்தபட்சம் ஒரு நாள் வணிகத் தடை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அரசியல் நிகழ்ச்சிகள் மக்கள் உயிர்களை பொறுப்பின்றி அழிக்கின்றன. வணிகர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக்காக இந்தப் போராட்டம் என தமிழ்நாடு வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கரூர் துயர சம்பவத்தையடுத்து, தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பெருந்துயரத்தில் கரூர்..!! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!