முன்பதிவு தேவையில்லை; வார இறுதி கூட்ட நெரிசலைக் குறைக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!
சென்னை, 2026 ஏப்ரல் 24: வார இறுதி நாட்களில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே நிலவும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே நாளை (ஏப்ரல் 25) முன்பதிவில்லாத மெமு (MEMU) எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி (ஏப்ரல் 25) சென்னையிலிருந்து நெல்லை செல்பவர்களுக்காக நாளை இரவு இந்த ரயில் இயக்கப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.45 மணிக்குத் திருநெல்வேலி சந்திப்பைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் நெல்லையிலிருந்து சென்னை திரும்புபவர்களுக்காக ஏப்ரல் 26-ஆம் தேதி இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஏப்ரல் 26 (ஞாயிறு) மதியம் 1.20 மணிக்குத் திருநெல்வேலியில் இருந்து புறப்படும். அன்றைய தினம் இரவு 11.45 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.
இதையும் படிங்க: நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!
இந்த ரயிலின் மிக முக்கியச் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் பயணம் செய்ய முன்கூட்டியே முன்பதிவு (Reservation) செய்ய வேண்டிய அவசியமில்லை. பயணிகள் சாதாரண டிக்கெட் கவுண்டர்களில் பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு இதில் பயணிக்கலாம். குறைந்த கட்டணத்தில் விரைவாகச் செல்ல விரும்புவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிந்து மக்கள் மீண்டும் பணி நிமித்தமாகத் தலைநகர் நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ள வேளையில், இந்த மெமு எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை எனத் தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் பயணிகளுக்கு, ரயில்வேயின் இந்தத் திடீர் அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதையும் படிங்க: பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!