கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் அன்னூர் ரோட்டில் உள்ள நடூர் என்ற பகுதியில் இந்த குடிநீர் குழாயில் அதிக அழுத்தம் காரணமாக திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல அடி உயரத்திற்கு தண்ணீர் மேலே பீய்ச்சி அடித்தது.

சுமார் 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தண்ணீர் அதிக அளவு வெளியேறி வருவதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மட்டன் குழம்பில் தேரை..! அசால்ட்டாக பதில்.. பிரபல ஹோட்டலுக்கு சீல் வைத்து அதிரடி!

சுமார் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கடந்த இரண்டு வாரமாக மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் நடூர் பாலம் அருகே திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது குடிநீர் திட்ட குழாயில் தண்ணீர் கசிந்து வெளியேறி வந்தது.

அதனை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்யவில்லை என கூறப்படுகிறது. இந் நிலையில் இன்று குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் 20 அடி உயரத்திற்கு மேல் பீச்சி அடித்தது. இதனால் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குழாயில் உடைப்பு ஏற்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தவுடன், குடிநீர் பம்பிங் செய்வது நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: திமுக பேனரில் புறக்கணிக்கப்பட்ட பொன்முடி... உள்ளூரிலேயே மரியாதை போச்சு!!