சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை அறிவித்துள்ளது. வருகிற டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய வார இறுதி தேதிகளில் தமிழகம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) முடிந்த நிலையில், கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாநிலம் முழுவதும் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் இறந்தவர்கள், தொகுதி மாறியவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 1.56 லட்சம் பேர் இறந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவை எதிர்க்க பாஜக முக்கியம்! அதிமுகவிடம் கறார்! முக்கிய தொகுதிகளை கேட்டுப்பெற திட்டம்!

பெயர் விடுபட்டவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள் இந்தச் சிறப்பு முகாம்களில் சென்று படிவம் 6 (புதிதாக சேர்ப்பது), படிவம் 7 (நீக்கம்), படிவம் 8 (திருத்தம்) ஆகியவற்றைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். ஆதார் அட்டை, முகவரி ஆதாரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் செல்ல வேண்டும். இதற்கான ஆட்சேபனை காலம் ஜனவரி 18-ஆம் தேதி வரை நீடிக்கும்.
முன்னதாக, சென்னை மாநகராட்சி சார்பில் டிசம்பர் 20-ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பல இடங்களில் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் வாக்குரிமையை உறுதி செய்துகொள்ள வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தச் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியல் மேலும் துல்லியமாக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும். வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்பதால், தகுதியுள்ள அனைவரும் பெயரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதையும் படிங்க: ஒருத்தருக்கு 440 ஓட்டு டார்கெட்! தேர்தலில் வெற்றி பெற ஸ்டாலின் புது வியூகம்!!