அமைச்சர் கீர்த்தனா மீதான விமர்சனங்களை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக எதிர்த்துள்ளார். ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலும் தனிப்பட்ட முறையிலும் குறிவைத்து நடத்தப்படும் டிரோல்களை வன்மையாகக் கண்டித்துள்ளார். அரசியல் வேறுபாடுகளும் கொள்கை முரண்பாடுகளும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை காயப்படுத்துவதற்கான காரணமாக ஒருபோதும் மாறக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
தன்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் சொல்லவும் தற்காத்துக் கொள்ளவும் ஒரு பெண் அமைச்சர் தனது பொன்னான நேரத்தை செலவிட வேண்டிய நிலை மிகவும் வேதனையானது என்றும், இத்தகைய டிரோல்கள் ஒரு பெண்ணின் மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் கவனத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் தனது பொறுப்பில் கவனம் செலுத்தி மக்களுக்காக பணியாற்ற வேண்டிய நேரத்தையும் சக்தியையும் இவை பறித்துவிடுகின்றன என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் தான் ஒரு அசைக்க முடியாத பாஜக பெண் தலைவர் என்றும், தனது கொள்கையிலும் கட்சியிலும் உறுதியாக நிற்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக குரல் கொடுத்தால் உடனே தன்னை “ஏ டீம்”, “பி டீம்” என்று கூறி டிரால் செய்ய வேண்டாம் என்று கோரினார். நானும் இத்தகைய டிரால்களை எதிர்கொண்டிருக்கிறேன். அந்த வார்த்தைகள் ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு பாதிக்கக்கூடும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அவற்றால் நான் அசைந்து போகவில்லை. இன்னும் உறுதியுடன், இன்னும் நம்பிக்கையுடன் நிற்கிறேன் என்று அவர் கூறினார். ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக குரல் கொடுப்பது எந்த “டீம்”-ஐச் சேர்ந்தது என்பதல்ல, அது மனிதநேயத்தின் அடையாளம் என்று தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால் திமுகவுக்கு நல்லதல்ல! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!
ஒரு பெண் அரசியல்வாதியை எதிர்க்க விரும்பினால் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள், அவரது கொள்கைகளை கேள்வி கேளுங்கள், அவரது செயல்பாடுகளை விமர்சியுங்கள், அவரது கருத்துகளுக்கு உண்மையான தரவுகளாலும் வலுவான வாதங்களாலும் பதிலளியுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்தார். அரசியலை அரசியலால் எதிர்கொள்ளுங்கள், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள், உண்மைக்கு உண்மையால் பதிலளியுங்கள். ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்தை மட்டும் காயப்படுத்தாதீர்கள் என்று அவர் வலியுறுத்தினார். டிரால்கள் எத்தனை வந்தாலும் நாங்கள் பெண்கள் அசைந்து போக மாட்டோம், அஞ்ச மாட்டோம், அமைதியாக பின்வாங்க மாட்டோம். உறுதியுடன் நிற்போம், மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்ற உறுதிப்பாட்டை பெண் தலைவர்கள் பெற வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதானியுடன் கர்நாடக முதல்வர் சிவகுமார் சந்திப்பு! ராகுலிடம் அனுமதி வாங்கினாரா? கொந்தளித்த பாஜக!