திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தமிழிசை சௌந்தரராஜன் அகல் விளக்குகளை ஏற்றி வழிப்பட்டார். முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்தத் தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆன்மீகத்தை அரசியல் ஆக்கியதே இந்த அரசுதான் என நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது; இது திமுக அரசுக்குக் கிடைத்த சவுக்கடி” எனத் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனது உயிரைத் தியாகம் செய்த பூரணச்சந்திரன் திருவுருவப் படத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “தமிழ் கடவுளான முருகன் மீது பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடப்பட்டுள்ளன; அப்படிப்பட்ட முருகனின் தலத்தில் தீபம் ஏற்றத் தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?” எனக் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது எனச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது, அவர் நீதித்துறையை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது எனச் சாடினார்.
இதையும் படிங்க: #BREAKING: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்... தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!
ஒரு மதத்திற்கு மட்டும் அனுமதி மறுத்துவிட்டு, மற்றொரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படும் திமுக அரசின் பாரபட்சமான போக்கு கண்டனத்திற்குரியது என்றும் தமிழிசை தெரிவித்தார். “கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்துகொண்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது குறித்துப் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் மட்டும் ஏன் தலையிடுகிறார்?” என ஆவேசமாக வினவினார். அரசாங்கமே ஒருவித பதற்றத்தை உருவாக்கிவிட்டு, தற்போது பழியை மற்றவர் மீது போடுவது ஏற்கத்தக்கதல்ல எனத் தெரிவித்த அவர், இந்த அரசு வெளியேறும் வரை பாஜகவின் போராட்டம் தொடரும் என எச்சரித்தார். இந்தப் பேட்டியின் போது தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து தங்களது வழிபாட்டைப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: "தனி நீதிபதி சொன்னது நடக்குமா?" கார்த்திகை தீப விவகாரத்தில் இன்று இறுதி தீர்ப்பு.. மதுரையில் பரபரப்பு!