திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் விவகாரம் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் தொடர்புடைய ஒரு நீண்டகால சர்ச்சையாகும். இந்த மலை உச்சியில் ஒரு பழங்கால கிரானைட் தூண் உள்ளது. இதை இந்து பக்தர்கள் தீபத்தூண் என்று கூறி, கார்த்திகை தீப திருவிழாவின் போது அங்கு தீபம் ஏற்றுவது பாரம்பரியம் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால், அந்த தூண் சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு அருகில் உள்ளதால், இஸ்லாமிய அமைப்புகளும் வக்ஃப் வாரியமும் இது தர்கா சொத்தில் உள்ளது என்றும், அங்கு தீபம் ஏற்றுவது மத சமநிலையை பாதிக்கும் என்றும் எதிர்க்கின்றன.
2025இல் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரினர். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த வழக்கை விசாரித்தார். அவர் மலை உச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பழங்கால இலக்கியங்கள், தொல்லியல் ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அந்த தூண் தீபம் ஏற்றுவதற்கானது என்றும், அங்கு தீபம் ஏற்றுவது தமிழ் மரபு என்றும் கூறி, கோயில் நிர்வாகம் அங்கு தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

இது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம், வக்ஃப் வாரியம் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் தீபம் ஏற்றுவது மத சமநிலையை பாதிக்கும், பழங்கால மரபு அல்ல என்று வாதிட்டனர். விசாரணை நீண்டது. பல்வேறு தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டன. இறுதியாக, டிசம்பர் 2025இல் வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: "தனி நீதிபதி சொன்னது நடக்குமா?" கார்த்திகை தீப விவகாரத்தில் இன்று இறுதி தீர்ப்பு.. மதுரையில் பரபரப்பு!
இதனிடையே, இந்த வழக்கின் தீர்ப்பு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று வெளியானது. தீர்ப்பை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாசித்தனர். கடந்த 18ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை மதுரை கிளை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். பொது அமைதி பாதிக்கும் என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் வாதம் தவறானது என்றும் கருதினர். மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வாதமும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றுதான் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்று கூறினார். பொது அமைதி பாதிக்கப்படும் என அரசுக்கு வருவது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் கூறப்பட்டது. தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மதுரை கிளை நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: “போலீஸாரை திரும்பப் பெற முடியாது!” – திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!