தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக, ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமையும் முதலமைச்சர் ஜோசப் விஜயும் திமுகவை ஊழல் கட்சியாக மக்களிடம் உருவகப்படுத்தும் வகையில் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மூலோபாயம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கனவே அக்டோபர் 6 அன்று நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய விளிம்பை அடைய முடியவில்லை. இரு தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமலேயே திமுக இரண்டாவது இடத்தை பிடித்தது. இதனால் தவெக தலைமையில் ஏற்பட்ட அதிருப்தி, அடுத்த கட்டத் தேர்தல்களுக்கு தயாராகும் போக்கை துரிதப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “காங்கிரஸுக்கு உரிய மரியாதை கொடுக்கல..!” திமுக மீது மாணிக்கம் தாகூர் அதிருப்தி புகார்!!
முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளி அனுமதி ஊழல் வழக்கில் அக்டோபர் 26 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுக்க தவெக தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான இடங்களில் அக்டோபர் 29 அன்று லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககம் (DVAC) 25 இடங்களில் சோதனை நடத்தியது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிட நியமனங்களில் ரூ.634 கோடி லஞ்சப் பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சோதனையை திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கையாக திமுக விமர்சிக்கிறது. ஆனால் தவெகவின் இலக்கு அனைத்து ஐந்து தொகுதிகளுமே என்பது தெளிவாகிறது.
அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி மற்றும் சேகர்பாபு ஆகியோரின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படலாம் என்ற பேச்சுகள் பலமாக உள்ளன. ஏற்கனவே சேகர்பாபு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த முறை ஆதாரங்களை உறுதியாக கைப்பற்ற வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் பிடிவாதமாக இருப்பதாக தகவல்.
மூர்த்தி தொடர்பான இடங்களில் டிவிஏசி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் “மக்கள் பணத்தை தொட்டால் சும்மா விட மாட்டேன்” என்ற தனது உறுதியை நிரூபித்து, மக்களிடையே தனது இமேஜை உயர்த்தி, திமுகவை ஊழல் சக்தியாக நிறுவ விஜய் நோக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கான ஆயத்தப் பணிகள் சென்னை கோட்டையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: எங்கே போனார் செந்தில் பாலாஜி..?? கோவையை மறந்துவிட்டாரா? திமுகவுக்குள் வெடிக்கும் அதிருப்தி!!