சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கு வரம்பு நிர்ணயிக்க தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) முடிவு செய்துள்ளது. இதன்படி, ரூ.500 வரை மட்டுமே ரொக்கமாக பணம் பெறவும், அதற்கு மேல் தொகையை டிஜிட்டல் முறையில் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுபான உற்பத்தி நிலையங்களில் இருந்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வது வரை கணினிமயமாக்கும் நடவடிக்கை கடந்த 2024-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலும் கையடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தும் வசதி உள்ளது.
எனினும், டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் மொத்த விற்பனையில் ரொக்கப் பணத்தின் பங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தினசரி சராசரியாக சுமார் ரூ.150 கோடிக்கு விற்பனை நடைபெறும் நிலையில், 80 சதவீதத்துக்கும் அதிகமான தொகை ரொக்கமாக வசூலிக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் விற்பனை மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி... காலி மதுபாட்டிலை திருப்பி கொடுக்கும்போது நடந்த விபரீதம்...!

கடைகளில் சேகரிக்கப்படும் ரொக்கப் பணம் பணியாளர்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் வங்கிகளில் செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை எடுத்துச் செல்லும்போது கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது.
இதற்கிடையே, டாஸ்மாக் இணையதளத்தில் மதுபான வகைகளை தேர்வு செய்து, ஆன்லைனில் பணம் செலுத்தி, கிடைக்கும் குறியீட்டை கடையில் காண்பித்து மதுபானங்களை வாங்கும் வசதியும் உள்ளது. ஆனால், இந்த முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மதுபாட்டில்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகரிப்பதன் மூலம் கூடுதல் விலை வசூல், சில்லரை தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை குறைக்க முடியும் என டாஸ்மாக் நிர்வாகம் கருதுகிறது. இதற்காக ரூ.500க்கு மேல் நடைபெறும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் மட்டுமே மேற்கொள்ளும் வகையில் விரைவில் கடைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால், டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.500க்கு மேல் தொகை செலுத்தும்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட உள்ளது.
இதையும் படிங்க: அனுதாபம் தேடுவதா? டாஸ்மாக் வழக்கில் செந்தில் பாலாஜி ஆதரவாளருக்கு சிக்கல்... ஜாமின் மனுவில் நீதிமன்றம் காட்டம்!