அமெரிக்கா தொடுத்துள்ள இறக்குமதி வரி யுத்தத்தால் இந்திய குறு சிறு நடுத்தர தொழில்முனைவோர்கள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்தொழில்களுக்கு வராக்கடன் விதிகள் தளர்த்த வேண்டும் என எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடி தீரும் வரை வராக்கடன்களாக அறிவிப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி குறு சிறு நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடப்பதாகவும் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

ஜவுளி, கடல் உணவு, நகைகள் ஆகிய துறைகள், அமெரிக்காவுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25% பங்கைக் கொண்டுள்ளதாகவும், இவை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். இந்தத் துறைகளில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 70% க்கும் அதிக பங்கு உள்ளது என்றும் இரசாயன துறையும் கடும் பாதிப்பை எதிர்கொள்கிறது எனவும் அந்தத் துறையின் ஏற்றுமதியில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 40% பங்கு உண்டு எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பாஜக-காரங்க அறிவு செயல்பாடு அபாரமாகிட்டு வருது..! சு.வெங்கடேசன் விமர்சனம்..!
இந்தச் சூழலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனே தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் விதிமுறைகளை தளர்த்தவும், இந்த நெருக்கடியின் போது குறு சிறு நடுத்தர தொழில்களின் கடன் கணக்கை, வராக்கடனாக வகைப்படுத்தாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே... எம்.பி சு.வெங்கடேசன் கடும் சாடல்