தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை நலவாழ்வு டிரஸ்ட் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் செயல்படுகிறது. இதை செங்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். பொதுமக்களிடம் நன்கொடை பெறப்பட்டு நடத்தப்பட்டு வரும் இந்த இல்லத்தில் மன நலம் குன்றிய மற்றும் முதியவர்கள் என 60க்கும் மேல் மக்கள் தங்கி இருக்கின்றனர்.

ஜூன் 10 இரவு இந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இதை அருந்திய பலருக்கு வாந்தி பேதி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக 9 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சங்கர், செங்கோட்டையைச் சேர்ந்த அம்பிகா, சொக்கம்பட்டியை சேர்ந்த முருகம்மாள் இறந்தனர். ஜூன் 13 காலை சிகிச்சையில் இருந்த தனலட்சுமி இறந்தார். பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!
தொடர்ந்து காப்பகத்தை உணவு பாதுகாப்பு துறையினர், வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்தனர். காப்பகத்தை நடத்தி வந்த செங்கோட்டை சேர்ந்த ராஜேந்திரன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராமலட்சுமி, இசக்கியம்மாள், மாரியம்மாள், மும்தாஜ், கருப்பாயி, செல்வராஜ், காளியப்பன், முப்பிடாதி, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட 12 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 17ம் தேதி சிகிச்சையில் இருந்த தென்காசி இடைக்கால் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி (வயது 50) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்று செல்வராஜ் (வயது 74) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 10 பேருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உயிர்களை பறித்த ஒவ்வாமை.. 5 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடம்! அதிர்ச்சி தகவல்..!