திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி விழா என ஆண்டுக்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆவணித்திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. இந்த ஆவணித்திருவிழா நாளை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதற்கிடையில் கொடிபட்டம் கொண்டு செல்வதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக கோவிலில் இன்று காலை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அப்போது கொடிப்பட்டம் தீபாராதனை காண்பிக்கப்பட்டு 14 நாட்டு செங்குந்த முதலியார் உறவின்முறை மடத்தின் நடுப்பகுதியில் வந்ததும் மடத்துக்கு பாத்தியப்பட்டவர்கள் கொடிப்பட்டத்தை திரிசுதந்திரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்று மாலையில் 14 நாட்டு செங்குந்த முதலியார் உறவின்முறை மடத்தில் இருந்து கொடிப்பட்டத்தை திரிசுதந்திரர்களிடம் மடத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே இரு தப்பினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் முருகன் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இருவரும் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க: நெல்லை ஆணவக்கொலை வழக்கு: உடந்தையாக இருந்த சுர்ஜித் சகோதரர் அதிரடி கைது..!!
இதையடுத்து கொடிப்பட்டத்தை திருச்செந்தூர் முருகன் கோவிலின் உப கோயிலான சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வந்தார். அங்கு கொடிப்பட்டத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு கொடிப்பட்டம் கோயில் யானை தெய்வானை மீது ஏற்றப்பட்டு திருச்செந்தூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வடக்குரத வீதி, தெற்குரத வீதி, கோவில் வெளி பிரகாரம் வழியாக யானை மீது கொண்டு வரப்பட்ட கொடிப்பட்டம் கோவிலை வந்தடைந்தது. இந்த சம்பவத்தின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக கொடிப்பட்டம் கொண்டு செல்லப்பட்டது.
கோவில் கொடிப்பட்டம் எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சனை திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொடர் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்.. இன்று நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி..!!