நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யவேண்டுமென நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை அளித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடைமுறைப்படி மக்களவைத் தலைவர் அவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஒரு சட்ட வல்லுநர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை உடனே அமைக்க வேண்டும். எனவே, மக்களவைத் தலைவர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார் என்றும் அதற்கு நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவே சாட்சியாகவுள்ளது எனவும் தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் வரம்புகளை மீறி, அதற்குத் தொடர்பில்லாத தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்த்து விசாரணைக்கு அழைத்துள்ளார். இது சட்டத்தை மீறுவதோடு மட்டுமின்றி, மாநில மத்திய அரசுகளை அவமதிப்பது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் பின்னணியில் பாஜக... அதிமுகவிற்கு வார்னிங் கொடுத்த திருமா...!
இவருக்குப் பின்னணியில் ஒரு சதிக்கும்பல் வேலை செய்வதாகத் தெரிகிறது என்றும் திருப்பரங்குன்றம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி மதவெறி அரசியலைத் தூபமிட்டு வளர்க்கப் பார்க்கிறார் என கருத வேண்டியுள்ளது எனவும் கூறினார். எனவே, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும்... கொலீஜியத்துக்கு திருமா. வலியுறுத்தல்...!