திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்பாக வழங்கப்பட்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக அமைந்துள்ளது என்றும் இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்நாட்டின் மதநல்லிணக்கச் சூழலை சீர்குலைப்பதற்கு வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது எனவும் கூறினார்.
திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாக பிள்ளையார் கோவில் அருகில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என்றும் இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத் தீர்ப்புகளும் உள்ளன., அவ்வாறு இருக்கையில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில்தான் தீபமேற்றுவோம் என்று சில பிரிவினைவாதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவாக சட்டத்துக்குப் புறம்பான முறையில் முதலில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

அதை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தனி நீதிபதி கொடுத்தத் தீர்ப்பையே வழிமொழிந்து இப்போது தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பது சமய சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் எதிரான இந்தத் தீர்ப்பு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக அமைந்துள்ளதாக கூறினார். தீர்ப்பைப் படிக்கும்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளில் ஒருமித்த நிலை இல்லை என்பதாகத் தோன்றுகிறது என்றும் இது கவலை அளிப்பதாக இருக்கிறது என்றும் திருமாவளவன் கூறினார்.
இதையும் படிங்க: அராஜக திமுக கொட்டம் தேர்தலில் அடக்கப்படும்... மேல்முறையீட்டிலும் தோல்வி தான்... நயினார் உறுதி..!
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து வட மாநிலங்களில் நிகழ்வதுபோல இங்கும் வகுப்புக் கலவரங்களை நடத்த சில பிரிவினைவாதிகள் மும்முரமாக இருப்பதாக திருமாவளவன் எச்சரித்தார். அவர்களுக்கு இடம் கொடுக்காமல், மக்கள் ஒற்றுமையைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவவும் அனைத்து சனநாயக சக்திகளும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய திருமா, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தீபத்துண் அல்ல… இதுதான் உண்மை.. சுடுகாட்டோடு ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதி..!