சென்னை திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு குறித்துப் பேசிய திருமாவளவன், மக்களவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு தீர்மானத்தை எதிர்க்க 230 எம்.பி.க்கள் ஓரணியில் திரண்டு வாக்களித்தோம். அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேறத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால், அந்தச் சட்டம் நேற்று முறியடிக்கப்பட்டது. இது தென் மாநிலங்களின் உரிமைகளுக்குக் கிடைத்த வெற்றி.
தமிழக அரசியல் களம் குறித்துப் பேசிய அவர், பாஜகவை வீழ்த்த திமுக கூட்டணியால் மட்டுமே முடியும் என வலியுறுத்தினார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தைப் போல அதிமுக இப்போது இல்லை. அது முழுமையாக பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளது. இரட்டை இலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவிற்கான வாக்குகளாகவே மாறும்.
இதையும் படிங்க: எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!
"தமிழகத்தில் இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்கும் தான் உண்மையான போட்டி நிலவுகிறது. இது தெரியாமல் விஜய் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் வாக்குகளையும், நடுநிலை வாக்குகளையும் பிரிப்பதன் மூலம் அதிமுகவிற்குச் சாதகமாகச் செயல்பட்டு, அதன் வழியாக பாஜக வெற்றி பெறவே விஜய் மறைமுகமாகப் பணியாற்றுகிறார். எடப்பாடி பழனிசாமி நேரடியாகவும், விஜய் மறைமுகமாகவும் பாஜகவின் வெற்றிக்காகப் பாடுபட்டு வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு முறையைப் பாராட்டிய அவர், "சுந்தரராஜன் போன்ற எளிய பின்னணி கொண்ட வேட்பாளர்களைக் களம் இறக்குவது கம்யூனிஸ்ட் கட்சிகளால் மட்டுமே சாத்தியம். அவர் சட்டமன்ற உறுப்பினரானாலும் அவரது ஊதியம் கட்சிப் பணிகளுக்கே செல்லும். மதவாத சக்திகளை வீழ்த்த திருவொற்றியூர் மக்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!