திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம், காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பிராய்லர் கோழிப்பண்ணைகளை நடத்தி வருகின்றனர். பிராய்லர் நிறுவனங்களிடம் இருந்து கோழிக்குஞ்சுகளை வாங்கி, 42 நாட்கள் பண்ணையில் வளர்த்து நிறுவனங்களுக்கு திரும்பக் கொடுக்கும் இவர்கள், ஒரு கிலோ எடைக்கு கூலியாக பணம் பெறுகின்றனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் 50 காசு என்று நிர்ணயிக்கப்பட்ட கூலி, இன்று வரை அதே அளவிலேயே வழங்கப்படுகிறது.
தற்போது மூலப்பொருட்களான தீவன விலை, மின்கட்டணம், ஆட்களுக்கான கூலி உள்ளிட்ட செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனால் பண்ணையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கூலியை உயர்த்தி வழங்காவிட்டால் பண்ணை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் தடையை மீறி அண்ணாமலை போராட்டம்! 600 பேர் மீது போலீசார் வழக்குபதிவு!
இதற்காக கோழிப்பண்ணையாளர்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பிராய்லர் நிறுவனங்களுக்கு கோழிகளை கொடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டனர். போராட்டம் தொடர்ந்தால் தமிழகத்தில் பிராய்லர் கோழி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழக அரசு இதில் தலையிட்டு, பிராய்லர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணையாளர்களை பாதித்துள்ளது. தமிழகத்தில் பிராய்லர் கோழி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் இப்பகுதியில் உற்பத்தி நிறுத்தம் தொடர்ந்தால் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் நிதி நெருக்கடி!! கையை பிசையும் திமுக! பயிர் இழப்பீடு வழங்க தாமதம்!