தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக அனைத்து அரசுத் துறைகளிடமிருந்தும் விரிவான தகவல்களை தமிழக அரசு கோரியுள்ளது.
அரசின் உத்தரவின்படி, ஒவ்வொரு துறையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற நிர்வாக நடவடிக்கைகள், அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், வெளிநாட்டு பயண அனுமதிகள், பதவி உயர்வுகள், அரசு ஊழியர்கள் நியமனம், பணியிட மாற்றங்கள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்ட உதவியாளர் பணியிடங்கள், ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்ட அதிகாரிகள், கருணை அடிப்படையில் நியமனம் பெற்றவர்கள், துறை சார்ந்த நிலுவை வழக்குகள் மற்றும் நிலம் கையகப்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பான தகவல்களையும் சமர்ப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய விஜய்... திமுக Ex.அமைச்சர் சிவசங்கர் தலையில் இறங்கியது பேரிடி... வெளியானது முக்கிய தகவல்....!

இதனுடன், ஒவ்வொரு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடும் பணிகளும் நடைபெற்று வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கைகள் மூலம் கடந்த ஆட்சிக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் நிதி விவரங்கள் ஆய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், மாநிலத்தின் வருவாய் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வருவாய் இழப்புகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கான திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்தும் முதல்வர் விஜய் நேரடியாக ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் முடிவுகள் பொதுமக்களுக்கு தெரியவரும் என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்டன் ஆன சென்னை... காலையிலேயே கொத்து, கொத்தாய் கைது... மதுரை, நெல்லை, கோவை, சேலத்திலும் தொடரும் அதிர்ச்சி...!