தமிழ்நாட்டில் சிறுபான்மையின மக்களின் கல்வி வளர்ச்சி, வக்பு சொத்துக்கள் மேம்பாடு மற்றும் ஹஜ் புனிதப் பயண ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை விரைவுபடுத்தக் கோரி, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை டெல்லியில் நேரில் சந்தித்துத் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் விரிவான கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, துறைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோருடன் இணைந்து டெல்லியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தோம்.
குறிப்பாக, கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வந்து தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலத்திட்டங்களை மீண்டும் உயிர்ப்பித்துச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். அனைத்து கோரிக்கைகளையும் கனிவுடன் கேட்டறிந்த மத்திய அமைச்சர், இதுதொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!
குறிப்பாகத் திட்டங்களுக்கான நிதி நிலுவை குறித்துப் பேசிய அவர், சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் கல்வி வளர்ச்சி, உட்கட்டமைப்பு மற்றும் கட்டிட வசதிகளை மேம்படுத்தும் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ₹909 கோடி நிதியை விடுவிக்குமாறு கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தியும் அது நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரினோம்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர், சில காரணங்கள் தற்போது ஆய்வில் உள்ளதாகவும், விரைவில் நிதி விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட சிறுபான்மைப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை உடனடியாக மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினோம் என்றார்.
தொடர்ந்து வக்பு மற்றும் ஹஜ் விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வக்பு சொத்துக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியில், தமிழ்நாட்டில் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களில் இதுவரை 4,680 பதிவுகள் வெற்றிகரமாகப் பதிவேற்றப்பட்டுவிட்டன; எஞ்சியுள்ள 1,438 சொத்துக்களைப் பதிவேற்றம் செய்ய ஏதுவாக மேலும் 90 நாட்கள் கூடுதல் அவகாசம் வேண்டும் எனக் கேட்டோம். அதையேற்று 90 நாட்கள் அவகாசம் வழங்க மத்திய அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார்.
மேலும், வக்பு நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் ஷஹரி வக்பு சம்பத்தி விகாஸ் யோஜனா திட்டத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தியுள்ளோம். அதோடு, 2027-ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்குத் தமிழகத்திலிருந்து 13,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், வெறும் 5,500 பேருக்கு மட்டுமே ஒதுக்கீடு வழங்கப்பட்டு 7,000-க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் பட்டியலில் தவிக்கின்றனர்; எனவே பிற மாநிலங்களில் காலியாக உள்ள ஒதுக்கீட்டு இடங்களைத் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்கிட வேண்டும் என விடுத்த கோரிக்கையையும் பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா தலைமையில்.. டெல்லியில் தொடங்கியது 18-வது பிரிக்ஸ் மாநாடு..!!