தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகள் செயல்படாது.
மாநிலத்தில் தற்போது 26,618 முழுநேரக் கடைகளும், 10,710 பகுதிநேரக் கடைகளுமாக மொத்தம் 37,328 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் சுமார் 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசியுடன் கோதுமை, பருப்பு, உப்பு, சேமியா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த விநியோக அமைப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளில், +2 கல்வித் தகுதியுள்ள விற்பனையாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்குதல், 10ஆம் வகுப்பு தகுதியுள்ள எடையாளர்களுக்கு கிராம உதவியாளர் ஊதியம் வழங்குதல், 9வது ஊதியக் குழுவில் சேர்த்தல், அனைத்துக் கடைகளிலும் எடையாளர் நியமனம், பொருட்களை சரியான எடையில் பொட்டலமாக வழங்குவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு, பொது விநியோகத் திட்டத்திற்கென தனித் துறை உருவாக்குதல், மாதாந்திர ஊதியத்திற்கு தனியாக நிதி ஒதுக்கீடு, ஓய்வூதியம் ரூ.10,000 வழங்குதல், கழிப்பிட வசதி உருவாக்குதல் ஆகியவை முக்கியமானவை. பொருட்களின் தரம் மற்றும் கொள்முதல் குறைபாடுகளுக்கு கடைநிலை ஊழியர்களை மட்டும் தண்டிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.30 சன்னரக அரிசி: 439 டன் அனுப்பியும் 16 டன் மட்டுமே விற்பனை.. விழிப்புணர்வு குறைவு காரணமா?

முதல் நாள் மாவட்டத் தலைநகரங்களிலும், இரண்டாம் நாள் கோட்ட அளவிலும், மூன்றாம் நாள் வட்ட அளவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று சங்கம் தெரிவித்துள்ளது. பல கட்டப் போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் இந்த நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என சங்க நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தால் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தடைபடும் என்பதால், அட்டைதாரர்கள் முன்கூட்டியே தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளை ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!