தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வத் தலைமையக எக்ஸ் (X) தளம் வழியாகத் தமிழக வாக்காளர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் காப்போம் என்ற முழக்கத்துடன், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய மக்கள் அனைவரும் அதிகாலையிலேயே திரண்டு வர வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. வெயிலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, வாக்காளர்கள் தங்களது பயணத்தைத் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணிக்குள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள், மதிய நேர வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே வாக்களித்துத் தற்காத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனநாயகத் திருவிழாவில் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் தவெக சுட்டிக்காட்டியுள்ளது:ஒருவர் விடாமல், ஒரு வாக்குகூட விடுபடாமல் என்ற இலக்குடன் வாக்களிக்க வேண்டும்.நம் வாக்கு - நம் உரிமை என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

தமிழகத்தில் இந்த முறை வரலாறு காணாத வகையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டும் எனத் தவெக தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வப் பக்கத்திலிருந்து வந்துள்ள இந்த வேண்டுகோள் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, வாக்குச்சாவடிகளில் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி விஜய் தேர்தல் ஆணையத்திற்குப் பத்தரிகையாளர் சந்திப்பு மற்றும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை காலை தமிழகம் முழுவதும் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மக்கள் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ளனர். ஜனநாயகம் காப்போம் என்ற தவெக-வின் இந்த அழைப்பு, வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!