தமிழகம், கேரளா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் என 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் கடந்த 4ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொடுத்து வருகின்றனர். எஸ்.ஐ.ஆர்., பணியை எளிமையாக்க வேண்டும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்ததையடுத்து, தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., பணிக்கான அவகாசத்தை டிசம்பர் 4ம் தேதியில் இருந்து 11ம் தேதியாக நீட்டித்து உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, இன்றைய தினம் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளன. நேற்று வரை 12 மாநிலங்களிலும் 99.98 சதவீத படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, 99.59 சதவீத் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களில் 99.99 சதவீத படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதாவது 4,201 பேருக்கு மட்டுமே படிவங்கள் வழங்கப்படவில்லை. விநியோகிக்கப்பட்டதில் 99.95 சதவீத பேரின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதாவது 26,967 பேர் மட்டுமே படிவங்களை திருப்பி அளிக்கப்படவில்லை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை படிவம் வழங்காத வாக்காளர்கள் இன்றுக்குள் படிவத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிலுக்குள் கட்டு கட்டாய் சிக்கிய SIR படிவங்கள்... அதிமுக சூழ்ச்சி அம்பலம்...!
டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்ய விரும்புவோர் உரிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம். ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் படிவம் 6, வெளிநாட்டில் இருப்பவர்கள் படிவம் 6ஏ, பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான ஆட்சேபனைகளை தெரிவிப்போர் படிவம் 7, முகவரி மாறியவர்கள் படிவம் 8 ஆகியவைகளை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து, படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர். பணிகள் சில மாநிலங்களில் முடிவடையாத நிலையில், மேலும் அவகாசம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிகிறது.
எஸ்.ஐ.ஆர். படிவங்களை திருப்பி அளித்தவர்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் எஸ்.ஐ.ஆர். 2026 என்ற பகுதிக்குச் சென்று செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களை அளித்து, தங்களது படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: எச்சரிக்கை...!! அமெரிக்கா செல்ல இனி இது கட்டாயம்... சுற்றுலா பயணிகளையும் விட்டு வைக்காத டிரம்ப்...!